17 ஜனவரி, 2008

பெண்கள், முரண்பாடுகள் : இது ஆண் கட்டமைத்த சமுதாயத்தின் தோல்வி!

பேராசை பிடித்த அமெரிக்க மருமகள்கள், என்ற வசந்தம் ரவியின் கட்டுரையை படித்த பிறகு ஒரு ஈயக்கட்டுரை எழுத வேண்டுமென்று ஆரம்பித்துவிட்டேன். ரவி மனைவிகள், கணவன்மார்களை அவன் வீட்டிற்கு உதவ விடுவதில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார். பெண்கள் பேராசைப்பிடித்தவர்களாக இருக்கின்றார்கள் என்றும் கூறியிருந்தார். நானும் சட்டென யோசித்தேன், ஆம் நமக்கு அந்த அளவு வீட்டிற்கு (கணவன் மற்றும் என்) செய்ய மனம் வருவதில்லையோ? ஏன் அப்படி என்று.

ஒரு பெண்ணிற்கு முரண்பாடுகளும், ஏற்றத்தாழ்வுகளும் அதிகம். ஒரு பெண் புகுந்த வீட்டிற்கு வரும் போது, பெற்றோரிடம் இருந்து கொண்டுவரத்தான் பழக்கியுள்ளார்கள். அதன் பின் அவளின் எல்லா சக்தியும், உழைப்பும், இன்ன பிறவும் அவளின் கணவனுக்காகவும் மற்றும் அவளின் குழந்தைக்காகவுமே செலவிடப்படுகின்றது. அவளின் பிறந்த வீட்டில் கூட அவளை முன்னிலைப்படுத்தி எடுக்கப்படும் பணம் சார்ந்த முடிவுகளும், பேச்சு வார்த்தைகளும் குறைவு தான்.

அதற்கான முக்கியக்காரணம் அவளால் பொருள் ஈட்ட முடியாதது தான், அது மாத்திரம் அல்ல அவள் பொருள் ஈட்டினால் கூட ஆண்களை முன்னிருத்தியே பழக்கப்பட்ட சமுதாயம் இது, சம்பாதித்தால் நீ புருசனுக்கு தரப்போகின்றாய் எங்களுக்கு எங்கே தரப் போகின்றாய் என்ற மனப்பாடும், ஆண் குழந்தை எனக்கு இதை செய்தான் அதை செய்தான் என்பதில் பெற்றோருக்குள்ள ஒரு கௌரவமும் தான் மிகப்பெரிய காரணம்.

இப்படி ஒரு பெண்ணை, அவளின் மனப்பாட்டை அவளுக்கு நிறைய கொடுத்தும், அவளிடமிருந்து எதிர்பார்க்காமலுமே பழக்கிவிட்டார்கள். அவள் புகுந்த இடம் சென்றாலும் அந்த பழக்கம் வரத்தான் செய்யும் என்று நினைக்கின்றேன். சம்பாதிக்கும் எத்தனைப் பெண்களை திருமணத்திற்கு பின் பெற்றோர்கள் தன் வீட்டிற்கு பணம் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள்? நான் ஏதாவது இப்போது கூட வாங்கித்தருகின்றேன் என்றால் அம்மா வேண்டாம் என்கின்றார்கள் என்ன செய்ய? ஆனால் இந்த மனப்பாட்டை ஆணிடம் சென்ற பின் மாற்றிக்கொள்ளவேண்டுமென்பது முரண்பாடானாது, எதிர்பார்ப்புகள், மற்றும் தேவைகள் எல்லாமும் முரண்பாடாகின்றது இதுவும் ஒரு அறியாமைதான். இதுவும் ஒரு அறியாமைதான்.

மனைவி ஏன் கணவனின் வீட்டிற்கு அதிகம் செய்ய விடுவதில்லை, ஏன் பேராசைக்காரியாய் இருக்கின்றாள் என்றால் அதற்கு ஒரே காரணம் அவளின் அறியாமையாகத்தான் இருக்கும். பெண்ணின் அம்மாவே(அவளும் ஒரு ஆணின் அம்மாவாக இருந்தாலும்) பையன் வீட்டிற்கு செய்யவிடாதே என்று கூறுவதும் அப்படிப்பட்ட மனநிலையில் பெண்கள் இருப்பதும், இருக்க வைப்பதும் அறியாமை என்று கூறாமல் எப்படிக் கூறுவது? பெண்களின் அறியாமைதான் இங்கே பேரின்பம் என்று, வேலைக்கு செல்லாத, படிக்காத பெண்ணை தான் திருமணம் செய்வேன் என்று அடம் பிடிக்கும் ஆண்கள், அவளை எதிர்கொள்ள திறமையில்லாமல் துன்பப்படுவார்கள் என்று நினைக்கின்றேன்.

அதை விட்டுவிட்டு, பெண் வீட்டிற்கும் தான் ஆண்(கணவன்) எதையும் செய்யவிடுவதில்லை என்பதும், இல்லை, இல்லை ஆண் தான் அவளை அடக்கப்பழக வேண்டும் என்பதும், ஆண் தான் பெண்ணை முன்னிருத்தி எதையும் பெற்றோருக்கு செய்வதில்லை என்பதும் தற்காலிகமான ஒரு சமாதான கருத்தாகத்தான் இருக்கும். என்னால் எந்த பெண்ணையும் சமாளிக்க முடியும் என்று நம்புபவர்கள் திருமணத்திற்கு பிறகு வீடிற்கு செய்வதைப்பற்றி யோசிக்கமுடியும் அவ்வளவு தான்.

உங்கள் கணிணி திறமை மற்றும் பொது அறிவு திறமை எல்லாம் அறியாமையான ஒரு பெண்ணின் முன் எம்மாத்திரம் என்று அப்படி ஒரு சூழ்நிலை வந்தாலேயொழிய புரியாது. இப்படி ஆரம்பம் முதலே ஆண் கட்டமைத்த இந்த சமுதாயம் பெண்களை அறியாமைக்கடலில் மூழ்க வைத்திருக்கும் வரை பெண்களால் வரும் சிற்சில பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். நீங்கள் சிறு வயதிலிருந்தே பெண்களுக்கு ஊட்டும் பழக்க வழக்கங்கள் மற்றும் கொடுக்கும் படிப்பினைகள் சார்ந்தது தான் அவை.

மற்றபடி கருப்பான பெண்களுக்கு ஆண் கிடைப்பதில்லை, மென் துறை தவிர எவருக்கும் பெண் கிடைப்பதில்லை மற்றும் பெண்கள் புத்திசாலிகளாய் இல்லை என்றெல்லாம் கூறிக்கொண்டு திரியும் ஆண்களே, இது தொடக்கத்திலிருந்தே இருந்து வந்த கலாச்சாரத்தின் தாக்கம், ஆண் கட்டமைத்த இந்த சமுதாயத்தின் ஒவ்வொரு தோல்வி அவ்வளவு தான்.

கருத்துகள் இல்லை: