தகுதியற்ற இடங்களில், தகுதியானவர்களைப் பார்க்கும் போதும், தகுதியான இடங்களில்
தகுதியில்லாதவர்களைப் பார்க்கும் போதும் மனதுக்குள் ஒரு குழப்பம் வரும், எல்லாமே சந்தர்ப்பம் சார்ந்தது தானோ என்று., ஆனால் பெரும்பாலும் தகுதிகள் மதிப்பிடப்படுவதும், அதற்கான அளவு கொள்களும் மிகையாக, பலவகைகளில் வேருபடுகின்றன.
"எந்த ஒரு சூழலையும் தனக்கு சாதகமாகவோ அல்லது பாதகமில்லாமலோ மாற்றிக்கொள்வது தான் புத்திசாலித்தனம்", "நீ விரும்பும் வாழ்வை விட, உனக்கு கிடத்த வாழ்வை விரும்பு" என்கின்ற இரண்டு வாக்கியங்களின் யதார்த்தம் வலிக்காமல் இருக்கும் ஒரு புள்ளியில், நாம் இந்த வாழ்வின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டோம் என்று தான் தோன்றுகின்றது. அழகான ஒரு கைவேலை செய்யலாம், கோலம் போடலாம், வரையலாம் ஆனால் அவற்றை ரசிக்கும் ஒரு உயிர் தான் நம் உடன் இருக்க வேண்டுமென்று நினைப்பது புத்திசாலித்தனம் இல்லையில்லயா?
என் அம்மா எனக்கு கற்றுக் கொடுத்தவை தான் கைவேலை, வரைதல் மற்றும் புத்தகம் படித்தல்., இத்தனைக்கும் அவர் பெரிய படிப்பு படித்தவரோ, இலக்கியவாதியோ அல்ல, ஆனால் இன்று இருக்கும் குழந்தைகளிடம் இந்த பழக்கங்கள் உள்ளனவா என்று தெரியவில்லை. சிறு பூங்கா அமைத்தல், பூக்கட்டுதல் என்று சில அழகான விசயங்கள் கூட மறக்கப்பட்டுவிட்டன, இவற்றையெல்லாம் செய்வது நேரத்தை வீணாகச் செலவு செய்வதாக நினைக்கும் உள்ளங்களுடன் கூட வாழ்க்கை அமையலாம், பணம் பண்ணும் உலகில் இவை பலருக்குத் தேவையற்ற விசயங்களாகிவிடுகின்றன. ஆனால் இவையெல்லாவற்றுடனான என் கணிணி அறிவும், கை நிறைய சம்பளமும் என்னுள், நான் கூறிய அந்த யதார்த்ததை மீறி பல முறை குழம்ப வைத்துள்ளன.
எனை சார்ந்து மட்டுமில்லாமல் என் சில தோழிகளின் வாழ்வும் கூட, இந்த யதார்த்தத்தின் உண்மையைப் பற்றிக்கொண்டு பல கேள்விகளை எழுப்பும்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நகைச்சுவைப்பகுதிகளில் வரும் ஆண்களைப்பார்க்கும் போது, என் கல்லூரியிலோ, விடுதியிலோ என்னுடன் படித்த பெண்களின் நகைச்சுவை உணர்வு தான் நியாபகம் வரும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அவர்களே யோசித்து, நகைச்சுவையாக, சிரிக்க, சிரிக்க பேசும் அவர்களின் திறமை வெளிச்சத்திற்கு வந்ததில்லை, அதைப்பற்றி அவர்கள் கவலையும் படுவதில்லை. என்றோ தஞ்சாவூர் பெரிய கோயிலில் வீணை அரங்கேற்றிய ஒருத்தி இன்று அவள் துணையின் சந்தேகத்தின் பிடியில் சிக்கி எல்லாவற்றையும் மறந்தவளாக இருப்பதும் எனை வெகுவாகப்பாதித்தது. என் அம்மா, சித்தியின் திறமையும், ஆனால் அவர்களின் மீதான அடக்குமுறையையும் நேராகப் பார்த்தவள் நான்.
அழகு மட்டுமிருந்தால் போதுமா புத்திசாலித்தனம் வேண்டாமா என்ற கேள்வியும், புத்திசாலியான அழகில்லாத பெண்ணை ஏற்றுக்கொள்வாயா என்ற மறுகேள்வியின் பதிலான மௌனமும் எனக்கு யதார்த்ததின் வலியை உணர்த்தியது. ஆனால் திறமை என்பதின் அர்த்தம், அதை வெளிக்காட்டுதல் மட்டும் தான் என்று நான் எண்ணியது தவறு என இப்போது நான் நினைப்பது தான் யதார்த்தத்தின் வலியை எனக்குப் போக்கியது.
அடக்குமுறையை ஏற்படுத்திவிட்டு பெண்கள் முட்டாள்கள் தான் என்று சந்தோசப்படும் ஆண்கள், நிச்சயம் யதார்த்தத்தை அணுக பயப்படுபவர்கள் என்று தான் தோன்றும்.
தரையில் இறங்கும் விமானங்கள் என்ற நாவலில் பரமுவின் கதாப்பாத்திரமும், அவன் மனைவியின் கதாபாத்திரமும் பல வகைகளில், சிலவற்றை விட்டுக்கொடுப்பதைப்போல் காட்டுயுள்ளார். பரமு தன் குடும்பத்திற்காக, தன் கனவுகளை இழப்பதும், அவன் மனைவி அவனுடைய நல்ல மனதிற்காக, தான் அவனுக்கு பொருத்தமில்லாதவள் என்று நினைத்தாலும் அவள் மிகவும் நல்ல மனமும், கலை உணர்வும் கொண்டவளாக இருப்பதும் விட்டுக்கொடுத்து வாழும் வாழ்வின் அழகைக் காட்டுகின்றது.
பரமுவின் தம்பி, தன் அண்ணியின் தகுதிகளையும், மதிப்புகளையும் தான் மட்டும் புரிந்து கொண்டதாகவும், அண்ணன் அவளின் மனதை அறியாமல் இருப்பதாகவும் நினைத்துக்கொள்வதும், தன் அண்ணிக்கு அண்ணன் பொருத்தமானவனல்ல என்று நினைப்பதும், அண்ணனின் வாழ்வு போல் தன் வாழ்வு அமையகூடாதென நினைப்பதும், தன் காதலி புத்திசாலியாக இருக்க வேண்டுமென்று நினைப்பதும், ஆனால் அவளின் அழகினால் அவளைப்பிரிய முடியாததும், அவனின் கவித்துவமான எண்ணங்களும்(இரவில் உட்கார்ந்து மாட்டுவண்டியின் அழகை ரசிப்பது, அலுவலகத்தின் வெளியில் மரங்களை ரசிப்பது, சுவரில் உள்ளதை சித்திரமாக நினைப்பது), செயல்களும் என அழகான ஒரு கதாப்பாத்திரப் படைப்பு.
அவனின் அழகு மட்டுமிருந்தால் போதுமா புத்திசாலித்தனம் வேண்டாமா என்ற கேள்வியும், புத்திசாலியான அழகில்லாத பெண்ணை ஏற்றுக்கொள்வாயா என்ற அவன் அண்ணியின் மறுகேள்விக்கு அவனின் மௌனமும், அதன் பின் அவனின் யோசனைகளும், அழகான ஒரு திருப்புமுனையாக உள்ளது. நானும் கூட சில நண்பர்களைப் பார்க்கின்றேன், புத்திசாலி பெண் வேண்டும் என்று ஆசைப்படுவதை. ஆனால் அதை விட அவர்களுக்குப் பெண் அழகாக வேண்டுமென்பதே முதல் குறிக்கோளாகின்றது.
ஆனால் இறுத்தியில் அவன் விரும்பாத ஒரு வேலையில், தன் அப்பா மற்றும் குடும்பத்திற்காக அமர்வதும், தன் காதலியை நோக்கிப்போவதும், பத்திரிக்கை முயற்சியை கைவிடுவதும் யதார்த்தத்தின் உச்சம். விமானம் ஒரு சமயம் தரையிறங்கத்தான் வேண்டும் என்பதையும், தரையிறங்கியும் அந்த யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல், சற்று தூரம் விமானம் ஓடுவதாகவும் கூறியிருக்கும் வரிகள்,நாவலின் தலைப்பின் அர்த்ததை விளக்குவதாக அழகாக உள்ளது.
கதை சட்டென முடிவது போலுள்ளது தான், குறையாக உள்ளது, ஆனால் கலை, கலை என்று வாழும் ஒரு ஆணின் கதாபாத்திரத்தை இத்தனை அழகாகக் காட்டியிருப்பது அருமை. நான் கூட அடிக்கடி நினைப்பேன் சிலரின் நல்ல குணங்களும், மதிப்புகளும் கவனிக்கப்படுகின்றனவா, அதற்கான வெகுமதி கிடைக்கப்பெருகின்றனவா என்று. ஆனால் மதிப்புகள் என்பது, சரியானவர்களால் மதிப்பிடப்படும் போது தான் அறியவரும், அதும் தேவையான இடத்தில், கடலில் நீருக்கான மதிப்பும், பாலையில் நீருக்கான மதிப்பும் போல...
நான் எதை தகுதியாய் என்னிடம் பார்க்கின்றேன் என்பதிலும், மற்றவர் என்னிடம் தகுதியாய் எதைப்பார்க்கின்றார்கள் என்பதிலும் பெருவாரியாக வேருபாடு உள்ளது. நான் தேடிய அல்லது ஆசைப்பட்ட தகுதிகள் கிடைத்த மாத்திரத்திலும் கூட நம் தேடுதல்களும் எதிர்பார்ப்புகளும் முடிவதில்லை அதனால் தான் ஆசைப்பட்டு திருமணம் செய்வதிலும் முறிவு ஏற்படுகின்றது. தகுதி என்பது நம்மிடம் இருப்பதில்லை, மற்றவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பதும், அவர்களால் உணர்ந்து கொள்ள முடிவதுமே தகுதியாகின்றது. எனவே தான் போகும் இடத்தின் சூழலுக்கேற்ப தன் எண்ணங்களை மாற்றிக்கொள்ள வேண்டுமென்ற யதார்த்தம் தான் வெற்றிகரமான ஒரு வாழ்வியல் தத்துவமாக எனக்குப் படுகின்றது.
1 பின்னூட்டங்கள்:
நீங்கள் எப்போதோ எழிதிய பதிவிற்கு இப்போது பின்னூட்டமிடுவது நன்றாக இல்லை தான். ஆனால் என்னை இள வயதில் பாதித்த இந்துமதி அவர்களின் நாவலைப்பற்றி படித்தபோது, கை துருதுருக்கிறது.சில அழகிய சம்பவங்கள்
நாவலில்), இப்போது நினைவில் இல்லை.
ஆனாலும் அந்த கால கட்டத்தில் அது ஒரு உயர்ந்த படைப்பு என்று நான் கருதுகிறேன்.
நாவலாசியை, அதன் பின் சிறிது தடம்மாறி விட்டதாக நான் உணர்ந்தேன்.
அவரது பிற்கால படைப்புகள் அவ்வளவு சிறப்பாக வரவில்லை.
கருத்துரையிடுக