11 அக்டோபர், 2007

பொன்னியின் செல்வனும், உடையாரும்

பொன்னியின் செல்வன் நான் மிகவும் ரசித்த புத்தகம், நிறையமுறை மீண்டும் மீண்டும் படித்த ஒரு புத்தகம்...

பொன்னியின் செல்வனில், கல்கி அவர்கள் கடைபிடித்திருக்கும் ரகசியங்களும்(யூகிக்க முடியாத), கதைக்களமும், எழுத்து நடையும், கதாபாத்திர படைப்புகளும் அப்பப்பா மிகவும் ரசித்த ஒன்று... நான் மிகவும் ரசித்து படித்த பகுதிகளை இங்கு குறிப்பிடுகின்றேன் முதலில்..

* வந்தியத்தேவன், ஆழ்வார்க்கடியானை முதலில் சந்திக்கும் இடம்...
* வந்தியத்தேவன் கந்தமாறனின் அரண்மனையில் புகுவதிலிருந்து, நந்தினி உதவியுடன் அரண்மனைக்கு சென்று, பாதாள வழி மூலம் அந்த ஆற்றை அடையும் வரையிலான இடம்..
* வந்தியத்தேவன் சேந்தன் அமுதனுடன் முதலில் பழகும் இடம்...
* பூங்குழலியைப் பார்க்கும் இடம் மற்றும் அவள் "காதலர்களை"க் காட்டும் இடம்..
* மந்தாகினி தேவியின் கதை...
* அநிருத்தருக்கும், பொன்னியின் செல்வனுக்கும் பெரியம்மைக்கும் உள்ள ரகசியங்கள்..
* சின்ன பழுவேட்டரையருக்கும், பெரிய பழுவேட்டரையருக்கும் நந்தினியால் ஏற்படும் சண்டைகள்..
* படகோட்டி மனைவியின் கதாபாத்திரம்..
* கரிகாலன், நந்தினியின் பால காலம்...

முக்கியமாக,

* வந்தியத்தேவன், நந்தினியின் அரண்மனையில்,பாதாள வழி மூலம் செல்லும் இடம்...
* வந்தியத்தேவன் இலங்கையில் சிறைபடும் இடத்தில் அடிக்கும் லூட்டி, மற்றும் தஞ்சாவூரில் அடிக்கும் லூட்டியும் கூட...
* நடு கடலில் பயப்படும் இடம் மற்றும் பொன்னியின் செல்வனுடன் படகில், பூங்குழலியுடன் செல்லும் இடம்

மிக மிகப் பிடித்தவை, 50 தடவைக்கும் மேல் படித்தவை,

* வந்தியத்தேவன் முதலில் பொன்னியின் செல்வனைப்பார்க்கும் இடம்..
* வந்தியத்தேவன், நந்தினி, மணிமேகலை மற்றும் கரிகாலன் ஆகியோர் ஒரு ஆற்றங்கரையில் உள்ள இடம்.
* மந்தாகினி தேவி இறப்பதிலிருந்து, வந்தியத்தேவன் நல்லவனென்று கூறி பெரிய பழுவேட்டரையர் இறக்கும் இடம்... (இது தான் மிகவும் படித்த இடம்...)

நான் ரசித்து, நினைத்துப்பார்த்து (வந்தியத்தேவன் இப்படித்தான் போயிருப்பானோ என்று காவேரிக்கரையிலிருந்து கொண்டு யோசிப்பது) மகிழ்ந்த ஒன்று தான் பொ.செ..

உடையாரைப்பற்றி....

அப்படி ஒரு புத்தகத்தைப்படித்துவிட்டு உடையார் படித்த போது அது அத்தனை ஒன்றும் என்னை ஈர்க்கவில்லை, பெரிய கோவில் மேலுள்ள காதலால் அதைப்படித்தாலும் பொன்னியின்செல்வன் அளவு நன்றாக இல்லை என்று தான் படும்..

உடையார் எளிய நடையில், எளிதாகப் புரிந்து கொள்ளும் பாத்திரப் படைப்புகளைக் கொண்டது(பாலகுமாரன் ரஜினி பேசுவது போல் எழுதியுள்ள சில இடங்களைத்தவிர).. மேலும் கதாபாத்திரங்களுக்கு இடையில் அத்தனை சார்பு இல்லை.. இங்கு கதைக்களம் வேறு என்பதால் இப்படித்தான் எழுத முடியுமென்றாலும் உடையார் அத்தனை ஈர்க்கவில்லை என்பது தான் உண்மை...

ஆனால், அந்த சூழ்நிலையில் ஏற்பட்டிருக்கக் கூடிய துன்பங்களையும், அரசியலையும், பிராமணர்கள் நிலையையும் பாலகுமாரான் அழகாக கற்பனை செய்து பதித்துள்ளார்... சில இடங்களில் என்னை ஈர்த்த சில பக்கங்கள்...

* யானை இறக்கும் இடம், அதனை ஒவ்வொருவரும் எப்படி எடுத்துக்கொண்டு / எடுத்துச்செல்கின்றார்கள் என்ற இடம்
* பாண்டிய நாட்டு அடிமையின் கதாபாத்திரப்படைப்பு
* அரண்மனைப்பெண்களின் பொறாமை மற்றும் நிலை
* ராஜராஜனின் பெண் காதலிப்பதால் வரும் பிரச்சனைகள்
* ராஜராஜியின் காதல்(கண்ணீர்)
* கோயிலுக்கு கல் உடைக்குமிடத்தில் நடைபெறும் இறப்பும், அதனைப்பற்றிய கருத்துகளும்

என் பாட்டி மற்றும் அம்மாவிற்கு உடையார் தான் பிடிக்கின்றது, எனவே இதனைப் பொதுவில் வைக்கின்றேன்... இரண்டுமே நல்ல நூல் தான் ஆனால் எனக்கென்னவோ பொன்னியின் செல்வன் தான் பிடிக்கின்றது...

9 கருத்துகள்:

நந்தா சொன்னது…

உடையாரா? பொ.செல்வனா என்று கேட்டால் பட்டென்று பொ. செல்வன்தான் என்றுதான் பலர் சொல்வார்கள் என்று தோன்றுகிறது.

உடையாரில் சில (பல) இடங்களில் வரலாற்றுப்பிழைகள் இருப்பதாக சொல்லப்பட்டு வந்தாலும் பெரிய கோயிலைக் கட்டிய போது ஏற்பட்ட பல்வேறு சிரமங்களைப் படம் பிடித்துக் காட்டி இருக்கிறது.

பொ.செ வெறுமனே அருண்மொழி, வாணதி, குந்தவி, வ.தேவன்,ஆழ்வார்க்கடியான், மந்தாகினி, நந்தினி, பழுவேட்டரைய சகோதரர்கள் என்று மன்னன் மற்றும் அரச குலத்தினரைப் பற்றி மட்டுமே சுற்றி வரும் ஒன்று.

ஆனால் உடையார் அப்படிப் பட்டதல்ல. அது பெரும்பாலும் கருமார்கள், தேவதாசிகள், ப்ராமணர்கள் மற்றும் பல்வேறு வகை மக்கள் அவர்களது கலாச்சாரம், அவர்களது வீடு அமைப்பு, வாழ்க்கை முறை சலுகைகள், என்று பல விஷயங்களைப் பேசிச் செல்கிறது. (அதன் உண்மைத் தன்மை எப்படி என்று என்னால் உறுதியாக இப்போது கூற முடிய வில்லை.)

அது மட்டுமல்ல, பொ. செல்வனி இருப்பதைப் போன்ற ஆச்சர்யங்கள், மர்ம முடிச்சுகள், திடீர் திருப்பங்கள், போர்கள், வீர சாகஸங்கள், மந்திர தந்திரங்கள் போன்றவை அதிகம் உடையாரில் இல்லை என்றுதான் தோன்றுகிறது.

இவ்வளவு ஏன்? உடையாரின் எழுத்து நடை முற்றிலும் வேறு. பொ.செ எழுத்து நடை முற்றிலும் வேறு.

உடையாரில் எல்லாரும் பக்கம் பக்கமாக வசனம் பேசுவார்கள். எப்படிப் பார்த்தாலு ரெண்டுமே நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல புத்தகங்கள்தான் என்றுத் தோன்றுகிறது.

பெயரில்லா சொன்னது…

no udaiyar.. only PS

Bruno சொன்னது…

தனது தந்தையை பார்க்க யானைப்பாகன் வேடத்தில் பொன்னியின் செல்வர் போவதும் பழுவேட்டரால் தடுக்கப்படுவதும் இன்றைய (contemporary action) சினிமா நடையில் இருக்கும்..... யோசித்து பார்த்தால் பொன்னியின் செல்வனில் இல்லாதது ஒன்றுமே இல்லை எனலாம்......

50 வருடங்களுக்கு எழுத்தப்பட்ட (தூய தமிழில் ஆங்கில கலப்பின்றி) நடை இன்றும் வாசிக்கத்தூன்டுவது தான் கல்கியின் திறமை

துளசி கோபால் சொன்னது…

உடையார்?

படிச்சதில்லை.

வெங்கட்ராமன் சொன்னது…

வேங்கையின் மைந்தன் படித்தீர்களா, அதுவும் மிகவும் நன்றாக இருக்கும்.

பொன்னியின் செல்வன் தொடர்ச்சி என்று சொல்லி காவிரியின் மைந்தன் என்று ஒரு நாவல் வந்துள்ளது, அதை யாராவது படித்திருக்கிறீர்களா. . .?

எப்படி உள்ளது என்று சொல்லவும்.

அறிவன் /#11802717200764379909/ சொன்னது…

பொன்னியின் செல்வன் நாவலின் சிறப்பியல்புகள்:
-ஒரு அருமையான கதைக் கட்டு
-பாத்திர அறிமுகங்களில் ஒரு ஒழுங்கு,சீரான தன்மை
-மிகவும் அவசியம்மான திருப்பங்கள் இல்லாதபட்சத்தில்,கதை மாந்தர்களில் குணாதிசயம் மாறாத் தன்மை
-தெளிந்த நீரோடை போன்ற கதைப் போக்கு
-வரலாற்று நிகழ்வில் கூடியவரை கற்பனையைத் தவிர்த்தது(நந்தினி,ஆழ்வார்க்கடியான்,திருந்திய உத்தம சோழன்,பூங்குழலி பாத்திரங்கள் மட்டுமே கற்பனை என்றறிகிறேன்.
-அக்காலத் தமிழர் நிலையைப் பற்றிய தெளிந்த பார்வையை விரித்தது.
-காலத்தை வென்று நிற்கும் கல்கியின் நடை

இவை ஒன்றுமே உடையாரில் இல்லை !!! பாலகுமாரனின் இயல்புக்கே உடைய தடுமாற்றங்கள் கதை நெடுகிலும் உள்ளன.
-கதை மாந்தர்களின் குணாதிசயங்கள் அடிக்கடி கதைப் போக்கில் மாறுவது
-தெளிவற்ற,படிப்பவற்கு ஆயாசம் தருகின்ற கூறியது கூறல் மிகுந்த குழப்ப நடை
-வரலாற்று சான்றுகள் பெரிதுமன்றி கதை தஞ்சையையே சுற்றி வருவது.(கல்கி பொ.செ. எழுதும் பொருட்டு ஈழம் போய் வந்தார்)
-ராஜராஜனுக்கும்,ராஜேந்திரனுக்கும் ஒயாப் பிணக்கு இருந்தது என சொல்ல முயலும் கருத்து
-எல்லா கதை மாந்தரும்,பா.குமாரனுக்கு விருப்ப subject ஆன, தேவரடியாரோ,விலைமாதரோடோ சம்பந்தப் பட்டிருப்பது
போன்று பல குறைகள்.
ஒரே நிறை என்று சொல்லலாம் எனில் கதை சமூக நிகழ்வுகளையும் தழுவிச் செல்வது.
உண்மையில் தென்னாட்டு அரசர்களில் பெரிதும் உயர்ந்திருந்த இரு வேந்தர்கள் நரசிம்ம பல்லவனும்,ராஜேந்திர சோழனும் தான்.அதிலும் கடல் கடந்து சென்று தமிழக வீரமும் பண்பாடும் தென் கிழக்கு ஆசிய நாடுகள் வ்ரை பரவியது ராஜேந்திரன் காலத்தில் தான்.அதற்கும் பெரிதும் கட்டமைப்பு வசதிகளை திறம்பட அமைத்தவன் ராஜராஜன்.
மற்றபடி பொ.செ. மலை என்றால் உடையார் மடு.
பொ.செ.வனை நான் என்னுடைய 10 வயதிலும் ரசித்தேன்,20 வயதிலும் ரசித்தேன்,,இன்று 35 வயதிலும் ரசிக்கிறேன்.50 வயதிலும் கூட ரசிக்க முடியும்.
பாலகுமாரனின் எழுத்துக்கள் இன்னும் 30 வருடத்தில் எங்கிருக்கும் என எவரும் அறியார்.
கானமயிலாட கண்டிருந்த வான்கோழி...நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

சின்ன அம்மிணி சொன்னது…

வள்ளி, உங்களை மாதிரியே பொன்னியின் செல்வன் தான் என்னை ரொம் ஈர்த்தது. உடையார் படிக்கும்போது 'ஓ பாலகுமாரன் இப்படியேல்லாம் வியக்கிறார்' என்றுதான் தோன்றியதே தவிர குறிப்பிட்ட கதாபாத்திரம் வியப்பது போல் தோன்றவேயில்லை. தவிரவும் எல்லா முக்கிய கதாபாத்திரங்களும் மனைவி, மனைவிகள் இல்லாவிடில் தேவ‌தாசிக‌ள் என்று ஒன்றுக்கு மேற்ப‌ட்ட‌ பெண்க‌ளோடு தொட‌ர்பு கொண்டிருப்ப‌தும், ம‌னைவிக‌ள் எல்லாரும் ம‌க்குக‌ள் போல‌வும், த‌ளிசேரிப்பெண்க‌ள் ம‌ட்டுமே அறிவிற்சிற‌ந்த‌வ‌ர்க‌ள் போல‌வும் சித்த‌ரித்துள்ள‌ க‌தையில் பெரும் ஓட்டை. ராஜ‌ராஜ‌ சோழ‌னின் ம‌னைவிய‌ர் எல்லாரும் பெரும்பாலும் பொம்மைக‌ள். ப‌ஞ்ச‌வ‌ன் மாதேவி ம‌ட்டும் அர‌ச‌னுட‌ன் பேச‌ த‌குதியான‌வ‌ர் போல‌வும் எழுதியுள்ள‌து ச‌ரியான‌ அணுகுமுறையாக‌த்தோன்ற‌வில்லை.

Doctor Bruno சொன்னது…

//ஓ பாலகுமாரன் இப்படியேல்லாம் வியக்கிறார்' என்றுதான் தோன்றியதே தவிர குறிப்பிட்ட கதாபாத்திரம் வியப்பது போல் தோன்றவேயில்லை.//

பாலகுமாரனின் தாக்கம் (அளவிற்கு) அதிகம் இருந்ததுதான் உடையாரின் "மைனஸ் பாய்ண்ட்".. சில தனிப்பட்ட கருத்துக்களை சொல்ல (??? திணிக்க) ஆசிரியர் முயன்றது மற்றொரு குறை

Sridhar Venkat சொன்னது…

பொன்னியின் செல்வன் கல்கியின் பார்வையிலிருந்து எழுதப்பட்ட புனைவு என்றாலும், அதில் அவர் தெரிய மாட்டார். படிப்பவர்கள் மனதை ஈர்க்கும் நடை, பாத்திர படைப்புகள், சம்பவங்கள் என்று பல சாதகமான விஷயங்கள்.

உடையார் பல அரிய தகவல்கள் உள்ளடக்கியதாக இருந்தாலும், ஒரு கட்டுகோப்பு இல்லாத கதை என்றுதான் சொல்ல தோன்றுகிறது. கதையில் பாலகுமாரன்தான் முழுவதும் தெரிகின்றார். அதனால் படிக்கும் பொழுது மிகுந்த ஆயாசாமாக இருந்தது. முழுவதும் படிக்க முடியவில்லை.

மெர்க்குரி பூக்கள், அகல்யா, தாயுமானவன், கரையோர முதலைகள் போன்ற சிறந்த புதினங்கள் எழுதிய பாலகுமாரனை அவரே தொலைத்துவிட்டார்.

பொன்னியின் செல்வன் காலத்தை விஞ்சியது. உடையார் பாலகுமாரனை மட்டும் கொண்டது.